உங்கள் வங்கிக் கணக்கு நீங்கள் அறியாமலே மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் - தற்காத்துக் கொள்வது எப்படி?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 837 பேரை கடந்த வாரம் சைபர் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் 48 மணிநேரத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் சில அறிவுறுத்தல்களை சைபர் குற்றப் பிரிவு வழங்கியுள்ளது.

மக்கள் பலரும் தங்களை அறியாமலேயே இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வதாக சைபர் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

என்ன நடந்தது?

தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் 48 மணிநேரம் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சைபர் குற்றப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதுதொடர்பாக, ஏற்கெனவே 601 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 157 புதிய எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த செய்திக்குறிப்பின்படி, சைபர் குற்றங்களில் பணத்தைச் செலுத்துவதற்கும் பின்னர் அதில் இருந்து எடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை திறந்தவர்கள், மோசடி நபர்களுக்கு இத்தகைய கணக்குகளை வழங்கியவர்கள், இத்தகைய வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்த உதவியவர்கள் என கைது செய்யப்பட்டோரில் பலரும் அடங்கியுள்ளனர். இத்தகைய வங்கிக் கணக்குகளை 'மியூல் கணக்குகள்' (mule accounts) என்கின்றனர்.

தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவு இணையதளம் (NCCRP), இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (14C) இணையதளம் (Pratibimb portal), மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்னணி மற்றும் விவரங்களைச் சேகரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றப் பிரிவு அளித்துள்ள தகவல்கள்

சைபர் குற்றப்பிரிவு அளித்துள்ள தகவலின்படி,

  • 9,804 என்சிஆர்பி புகார்களுடன் இணைக்கப்பட்ட நபர்களை இந்த நடவடிக்கை குறிவைத்துள்ளது. இதன்மூலம், சுமார் ரூ.545 கோடி மோசடி தொகையுடன் இந்தப் புகார்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • 837 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக, ஏற்கெனவே 601 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 157 புதிய எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மேலும் 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/கணினிகள், 1 பென் டிரைவ்/சேமிப்பு சாதனங்கள், ரூ.1,02,000 பணம், 114 வங்கிக் கணக்குகள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு, 2 மற்ற மின் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  • மேலும், 155 மொபைல் எண்கள், 58 வங்கிக் கணக்கு விவரங்கள் மேல் விசாரணைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடிகளை தடுப்பதில் இத்தகைய வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமான படி என்றும் சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

உறவினர்கள் கூறுவது என்ன?

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சென்னை காவல் ஆணையரகத்துக்கு முன்பு ஊடகங்களிடம் பேசினர். அப்போது, கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் ஊடகங்களிடம் பேசுகையில், "என் மகனை என்னிடம் காட்டவில்லை. அவன் திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை. அவன் வாழ்க்கை போய்விட்டால் என்ன செய்வது?" என்றார்.

கைது செய்யப்பட்ட ஒருவரின் சகோதரர் ஊடகங்களிடம் பேசுகையில், "எந்தத் தகவலையும் போலீசார் கொடுக்கவில்லை. வங்கிக் கணக்குக்கு பணம் வந்ததுதான் காரணம் என்கின்றனர். இத்தகைய மூன்றாம் தர செயலிகள் எல்லாம் இன்ஸ்டாகிராமிலேயே கிடைக்கின்றன. அதன்மூலம், ரூ.500, 1000 வந்ததற்கு, இப்படி கைது செய்து உட்கார வைத்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "எல்லோரும் படிக்கும் மாணவர்கள், தற்போதுதான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும். இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் சைபர் குற்றம் என்றால் என்னவென்று கூட தெரியாது. லிங்க் கிளிக் செய்தது மூலமாகக் கூட பண பரிமாற்றம் நடந்திருக்கிறது" என்றார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "என் மகன் மெக்கானிக் தொழில் செய்கிறான். அவன் ஏதோ (இணைய விளையாட்டு) கேம் விளையாடியதாகக் கூறுகின்றனர். ஆனால் விவரம் எதுவும் தெரியவில்லை" என்றார்.

மியூல் கணக்கு என்பது என்ன?

ஒருவருடைய வங்கிக் கணக்கை மற்றொருவர் இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதுதான் 'மியூல் கணக்கு' என்கிறார் சைபர் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

ஆனால், பலருக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்காக தங்கள் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படுவதே தெரியாது என்றும் குறிப்பிட்டார் அவர்.

கார்த்திகேயனின் கூற்றுப்படி, "இத்தகைய இணைய குற்றச் செயல்கள் பெரும்பாலும் கம்போடியா, தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற நாடுகளில் இருந்தே நடக்கின்றன. ஒருவரை இணைய மோசடியில் ஏமாற்றி பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பணம் வாங்குவதற்கு ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படுகின்றது."

அதோடு, "இந்த மோசடி வலைப்பின்னல், அதற்காக 'ரன்னர்' (runners) எனும் பெயரில் இந்தியாவில் பலரை வைத்திருப்பார்கள். அவர்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் சாலையோர வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு ஏமாற்றுவார்கள்" என்றும் அவர் விளக்கினார்.

எப்படி ஏமாற்றுவார்கள்?

சைபர் வல்லுநர்கள் கூறுவதன்படி, ஒருவர் தாம் வெளியூரில் இருந்து வந்திருப்பதாகவும் தன்னிடம் வங்கிக் கணக்கு இல்லாததால், தனக்கு யாராவது பணம் அனுப்பும்போது அதை உங்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி, அதை எடுத்துக் கொடுக்குமாறும் உதவி கேட்பது போன்று கூறுவார்கள்.

"அப்படி உதவுவதற்காக ரூ.500-1000 என்று கொடுப்பார்கள். இதையே தொடர்ச்சியாகச் செய்வார்கள். கமிஷன் கொடுப்பார்கள். இந்தப் பணம் குற்றச் செயல்கள் மூலமாக வருவது அவர்களுக்குத் தெரியாது. அதேபோன்று, முதலீடுகள் மூலம் ஏமாற்றினால் நீங்கள் அவர் கூறும் தளத்தில் பணம் செலுத்தும்போது, அதன்மூலம் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அணுகுவார்கள். மேலும், உங்கள் வங்கிக் கணக்குக்கு நீங்கள் அறியாமலேயே, அவர்களின் மொபைல் எண்ணுக்கு இணைய வங்கி வசதியை (internet banking) ஏற்படுத்திக் கொள்வார்கள்" என்று விளக்குகிறார் கார்த்திகேயன்.

நாளடைவில் இத்தகைய இணைய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கும்போது அவர்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம் வங்கிக் கணக்கு என்பதால், அந்த வங்கிக் கணக்கு யாருடையதோ அவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்கிறார் அவர்.

அவரது கூற்றின்படி, "மியூல்' என்றால் பொதி சுமக்கும் கழுதை. வேறு யாரோ செய்யும் குற்றத்திற்கு இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சில வங்கிகளும் இதில் மோசடி வலைப்பின்னலுடன் தொடர்பில் இருக்கும். நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் மொபைல் எண்ணில் இணைய வங்கி வசதியையும் சில வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன.".

இத்தகைய வங்கிக் கணக்குகளை வழங்குவோர் மீதும் சட்ட நடவடிக்கை பாயலாம் எனக் கூறும் அவர், பிஎன்எஸ், தகவல் தொழில்நுட்ப சட்டம் இரண்டிலும் அதற்கான பிரிவுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சைபர் பாதுகாப்பு வல்லுநரான ஹரிஹரசுதன் தங்கவேலு கூறுகையில், "இவை சட்டபூர்வ வங்கிக் கணக்குதான். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களைக் குறிவைத்து அவர்களின் ஆதார் போன்ற விவரங்களைப் பெற்று அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துவார்கள்" என்று விளக்கினார்.

அதுமட்டுமின்றி, "சிலருக்குத் தெரிந்தே மாதம் இவ்வளவு ரூபாய் கமிஷன் தருகிறோம் எனக் கூறி அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்துவார்கள். இதில் பணத்துக்காக சிலர் தெரிந்தே தங்கள் வங்கிக் கணக்கை வழங்குவார்கள். தங்கள் நிறுவன தேவைக்கு வேண்டும், வரும் பணத்தை அனுப்பிவிட்டால்போதும் எனக் கூறியும் ஏமாற்றுவார்கள். கால் சென்டர்கள், செயலிகள் மூலம் இத்தகைய வலைப்பின்னலை இயக்குகின்றனர்" என்று அவர் விவரித்தார்.

இத்தகைய இணைய மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் 'மியூல்' கணக்குகளைக் கையாள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டுமென, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் வங்கிகளுக்கும் உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக பல உத்தரவுகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இத்தகைய வங்கிக் கணக்குகள் விசாரணையின்போது முடக்கப்படலாம் என்றும், விசாரணையில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

இந்த மோசடியில் இருந்து தப்பிக்க பொது மக்களுக்கு சைபர் போலீஸ் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

  • பாஸ்வேர்ட், ஓடிபி, வங்கி தகவல்கள் போன்ற முக்கிய விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வெகுமதி அளிப்பதாகவோ அல்லது உடனடியாக பணம் அனுப்புமாறோ வரக்கூடிய தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள், இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
  • ஏமாற்று வேலைகளுக்காக உருவாக்கப்படும் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • உண்மை எனத் தோன்றுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் கொண்ட தகவல்கள் அல்லது உடனடி சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவது குறித்தோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • இத்தகைய மோசடி செயல்களுக்காகப் கமிஷன் பணம் தருவதாகக் கூறுபவர்களிடம் உங்கள் வங்கித் தகவல்களைப் பகிரக்கூடாது.
  • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வ தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • ஓடிபி அல்லது மற்ற முக்கியமான குறிப்புகளை ஒருபோதும் பகிரக்கூடாது.
  • பணப் பரிமாற்றங்களுக்கு நம்பிக்கையான வழிகளையே பயன்படுத்தப்பட வேண்டும், பொது இடங்களில் செயல்பாட்டில் உள்ள வைஃபை மூலம் பணம் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் மொபைல் போன்ற மின் சாதனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை (two-factor authentication) வழங்கும் வகையில் இருகட்ட பாதுகாப்பு வழிமுறைகளை அமைத்திருத்தல், பாஸ்வேர்டை தொடர்ச்சியாக மாற்றுதல், சாஃப்ட்வேர்/மின்சாதனம் போன்றவற்றை அப்டேட் செய்தல் போன்ற வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
  • அறிந்தோ அல்லது அறியாமலோ பணத்திற்காக வங்கி தகவல்களைப் பகிர்வது, சைபர் குற்றம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கையைத் தூண்டலாம்.
  • உண்மையான காவல் அதிகாரி, நீதிமன்றம் அல்லது அரசாங்கம் வீடியோ அழைப்பு மூலமாகக் கைது செய்யப்பட மாட்டார்கள் அல்லது கைது நடவடிக்கையைத் தடுக்க பணம் கோர மாட்டார்கள். அத்தகைய அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிட்டு அதுகுறித்துப் புகார் தெரிவிக்க வேண்டும்.
  • மிக அதிகளவில் அல்லது வழக்கத்தை மீறிய லாபம் தருவதாகக் கூறப்படும் முதலீட்டு ஆலோசனைகளை நம்பி ஏமாறாதீர்கள். அதற்காகப் பணத்தை அனுப்புவதற்கு முன்பாக, முதலீட்டு தளங்கள் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து சோதிக்க வேண்டும்.
  • பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கிய இணைய சூதாட்டம் அல்லது இணைய விளையாட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய தளங்கள் சைபர் குற்ற வலைப்பின்னல்களுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம், இதனால் பயனர்கள் சட்டபூர்வ விளைவுகளைச் சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே, மக்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சைபர் மோசடிகளில் நீங்கள் சிக்கியிருந்தால் சைபர் குற்றப் பிரிவின் 1930 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

"கார், பைக் போன்ற பொருட்களை நமக்குத் தெரியாத யாருக்கும் வழங்க மாட்டோம் அல்லவா, அதேபோன்று வங்கிக் கணக்கும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. எனவே, அதை யாருக்கும் வழங்கக் கூடாது" என்று வலியுறுத்துகிறார், சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு