You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கோயில் படிக்கட்டில் தொடங்கிய ஓட்டம்' - கல்பனா சாவ்லா விருது வென்ற நௌஷீன் பானு நெகிழ்ச்சி
"கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கோவில் படிக்கட்டுகளில் என் ஆறு வயதில் ஓடிப் பழகினேன். அதுவே இமயமலையில் 42 கி.மீ மாரத்தான் ஓடுவதற்கு அடிப்படையாக இருந்தது."
"மனதிற்கான விளையாட்டு (Sports for mind) என்பதுதான் என் கொள்கை. இதுவே விருது வாங்க வேண்டுமென்று மட்டுமே நினைத்திருந்தால் என்னால் வென்றிருக்க முடியாது."
தமிழ்நாடு அரசின் துணிவு மற்றும் சாகச செயலுக்கான 'கல்பனா சாவ்லா' விருதை வென்ற கோவை நௌஷீன் பானு சந்த், பிபிசி தமிழிடம் கூறிய வரிகள் இவை.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நௌஷீன்பானு சந்த், 2024ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று முறை இமயமலையில் 'டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்' (42 கி.மீ) போட்டியை நிறைவு செய்துள்ளார்.
உலகின் மிகக் கடினமான பந்தயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 42.195 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதை, 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் முகாமில் (Base camp) இருந்து தொடங்குகிறது.
அங்கிருந்து இமயமலைப் பகுதிகள் வழியாக 3,440 மீட்டர் உயரத்தில் உள்ள நம்ச்சே பஜார் (Namche Bazar) வரை நீள்கிறது. இந்தப் பந்தயத்தை 2024ஆம் ஆண்டு சுமார் 10 மணிநேரம் 45 நிமிடங்களில் நௌஷீன் பானு சந்த் நிறைவு செய்தார்.
அதிக பயிற்சிகள் தேவைப்படும் இந்த மாரத்தான் போட்டியில் இவர் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். இதை அல்ட்ரா டிஸ்டன்ஸ் விளையாட்டு (Ultra-distance sport), டிரெயில் ரன்னிங் (trail running) எனக் கூறுகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் குறிப்பிட்ட பிரிவினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும் விளையாட்டுகளாக இவை உள்ளன. டிரெயில் ரன்னிங் என்பது மலைகள், காடுகள் போன்ற கரடுமுரடான இயற்கைப் பகுதிகளில் வழித்தடங்களைக் கண்டறிந்து ஓடுவதைக் குறிக்கிறது.
ஓட்டம், சறுக்கு விளையாட்டு (skating), மிதிவண்டி ஓட்டுதல் என எதுவாக இருந்தாலும் 42.195 கி.மீ தாண்டி மேற்கொள்ளப்படும் விளையாட்டை 'அல்ட்ரா டிஸ்டன்ஸ்' என்கின்றனர்.
இந்தப் பந்தயங்கள், நாம் தடைகளை எதிர்கொள்ளும்போது வெளிப்படக் கூடிய சகிப்புத்தன்மை மற்றும் மன உறுதியைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளன.
"அந்த வகையில், மனதிற்கான விளையாட்டு என்பதுதான் என் கொள்கை" என்கிறார் நௌஷீன் பானு சந்த்.
"எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் மனதிற்காக மட்டுமே முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வெற்றி பெறலாம். விருதுகளை மட்டும் நோக்கமாகக் கொண்டு பங்கேற்க நினைத்தால் எளிதில் வெற்றி பெற முடியாது என்று நான் நம்புகிறேன்" என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் இருந்து கல்பனா சாவ்லா விருதை, நௌஷீன் பானு சந்த் இன்று (ஆகஸ்ட் 15) பெற்றார்.
விருதுக் குறிப்பில், மனதிற்கான விளையாட்டு என்ற கோட்பாட்டின் மூலம் மன வலிமையை முதன்மைப்படுத்தி விளையாட்டு, தொழில் மற்றும் சமூகப் பணிகளை நௌஷீன் பானு சந்த் மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
"கடந்த 2023ஆம் ஆண்டு லடாக்கில் 42.195 கி.மீ மாரத்தான் ஓட்டம், 22 கி.மீ இன்லைன் ஸ்கேட்டிங் ஆகியவற்றுக்காக இரண்டு 'நோபல் உலக சாதனை'களை (Noble World Records) அவர் படைத்துள்ளார்" என்றும் தமிழ்நாடு அரசின் விருதுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர் ஏரோநாட்டிக் பொறியியல் மற்றும் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது கோவையில் உள்ள பிரிகால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். முதலமைச்சரிடம் விருது பெற்ற நௌஷீன் பானுவிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் பிபிசி தமிழுக்காக சந்தித்துப் பேசினோம்.
தமிழ்நாடு அரசின் விருதை எப்படி பார்க்கிறீர்கள்?
"அரசு கொடுக்கும் விருதை இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறேன். ஒரு பெண் நினைத்தால் இமயமலையிலும் ஓட முடியும் என்கிற எண்ணத்தை இது விதைத்துள்ளது."
"அடுத்து, நான் மேற்கொள்ளும் டிரெயில் ரன்னிங் விளையாட்டை உலகில் சுமார் 10% பேர் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். மலைச் சிகரங்களில் ஓடக் கூடியவர்களுக்கு அதற்கான தகுதி உள்ளதா, அந்த ஓட்டம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த விருது உதவும்."
இமயமலை செல்வதற்கான தூண்டுதல் வந்தது எப்படி?
"என் அப்பாவின் சொந்த ஊர் கோபிச்செட்டிபாளையம். அங்குள்ள கோவில் படிக்கட்டில் ஓடிப் பழகியிருக்கிறேன். என் ஆறு வயதில் இந்த ஓட்டம் தொடங்கியது."
"முப்பது வயதில் இமயமலையில் 42 கி.மீ மாரத்தான் முடிக்கும் அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பட்டப்படிப்பு முடித்த பிறகு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். பயிற்சிக்கு நேரம் இருக்காது என்பதால் சுமார் பத்து கி.மீ சைக்கிளில் பயணிப்பேன்."
"தடைகளை நாம் உடைக்க வேண்டும். தடைகளால் நாம் உடைந்து போய்விடக் கூடாது. எதையும் மனதிற்காக செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, விருது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்வதில்லை."
குடும்பத்தினர் ஆதரவு எந்த அளவுக்கு இருந்தது?
"எங்கள் சமூகத்தில் நிறைய பெண்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டும்; கல்வியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் சிலர் பேசுவார்கள்."
"அப்படியொரு சூழலை எனது குடும்பத்தினர் என் மனதில் விதைக்கவில்லை. 'சாதிக்க வேண்டும்' என ஆறு வயதில் இருந்தே எடுத்த பயிற்சிகள்தான் கை கொடுத்தன. என் விளையாட்டு வாழ்வில் தற்போது வரை நடந்தவை அனைத்துமே வெறும் தொடக்கம்தான்."
இமயமலையில் ஓடுவதற்கான பயிற்சி, பயண செலவுகள் போன்றவற்றுக்கு குடும்ப சூழல் இடம் கொடுத்ததா?
"என் தந்தை பார்மஸிஸ்ட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். அண்ணன், வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், நான் வேலைக்குப் போவதே பெரிய விஷயம்" என்றார்கள்.
"கடந்த 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன்ஸ் பவுண்டேஷன் மூலம் என் போட்டிகளுக்கான செலவுகளுக்கு உதவி செய்தனர். நான் வேலை பார்க்கும் பிரிகால் நிறுவனம் உதவி செய்தது. இப்படியாக என் வெற்றிக்குப் பின்னால் நிறைய பேரின் தோள்கள் இருக்கின்றன".
அடுத்தகட்ட இலக்கு?
"ஒலிம்பிக் போட்டியில் டிரெயில் ரன்னிங் விளையாட்டைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் போட்டியில் நானும் பங்கேற்பேன். தற்போது இந்தியன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருக்கும் பி.டி.உஷாவுக்கு இதை ஒரு கோரிக்கையாகவே வைத்துள்ளேன்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு